Wednesday, February 27, 2008

யார் பிராமணன்

இந்த உபநிஷதம் சாம வேதத்தைச் சார்ந்ததாகும். இது அறியாமையைத் தகர்ப்பதாகும். பிரம்ம ஞானம் விளங்கப் பெறாதவரை இடிப்பதாகும். ஆனால் அறிவு மேம்பாட்டுடையோரை ஏத்துவதாகும். இவ் வஜ்ரசூசிக் கொள்கை இவையே. வர்ணாசிரம தர்மத்தை, அதாவது பிரமணன், சாத்திரியன், வைசியன், சூத்திரன் எனும் நான்கு பிரிவுகளை வேதங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஸ்மிருதிகளும் நீதி நூல்களுங் கூட ஒப்புக் கொண்டுள்ளன. உண்மையில் யார் பிராமணன்? அவன் ஜீவனா அல்லது உடலா? அல்லது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகுப்பா? அறிவால் ஒருவன் பிராமணனா? அல்லது தொழிலால் ஒருவன் பிராமணனா? சுயக்கிரியைகள் புரிவதால் ஒருவன் பிராமணனா? சமயக் கிரியைகள் புரிவதால் இங்கு ஒருவன் பிராமணனா? இவற்றுள் ஜீவன் பிராமணனாக இருக்க முடியாது. முற் பிறப்பான முந்தைய உடல்களிலும் ஜீவன் ஒன்றே. அது ஒன்றாக இருந்தாலும், முந்தைய கர்மங்களால் உந்தப்பட்டு, அனேக உடல்களைத் தாங்கும் நிலை அதற்குண்டு. எல்லா உடல்களிலும் ஜீவபாகம் ஒன்று தானே, அதன் ஜீவன் பிராமணனாக இருக்க முடியாது என்றாகி விட்டது. பிறகு, உடல்தான் பிராமணன் என்றால் அதுவும் இல்லை. மானிட வகுப்புகள் அனைத்தும் ஐம்பூதங்களால் ஆன உடல்களைக் கொண்டவையே. இத்தன்மையான ஒருமையாலும் மற்றும் முதுமை, மரணம், குணம், குற்றம் எனும் பொது நிலைகளாலும், இன்னும் இவை போன்ற பிற பொதுமைகளாலும் உடல் பிராம்மணன் இல்லை என்றாகி விட்டது. பிறப்பால் தான் பிராமணன் என்றால், அதுவும் இல்லை. அந்தக் கால முனிவர்கள் அநேகர் வௌ;வேறு வகையான மூலம் உடையவராயுள்ளனர். மானிட இனமன்றி, அநேக உயிரினங்களை மூலமாகக் கொண்டவர்களும் உண்டு. ரிஷ்ய சிருங்கர் ஒரு மானிலிருந்து பிறந்தவர். கௌசிகர் செய்புல்லிலிருந்து பிறந்தவர். வால்மீகி எறும்புப் புற்றிலிருந்தும், ஜாம்புகர் ஒரு நரியிலிருந்து உதித்தவர்கள். வியாசர் ஒரு மீனவப் பெண்ணினின்றும், கௌதமர் ஒரு முயலில் முதுகுலிருந்தும் தோன்றியவர்கள். வசிஷ்டர், ஊர்வசி என்கிற ஒரு காந்தர்வப் பெண்ணிடம் தோன்றினார்; அகஸ்தியர் ஒரு மண் குடுவையினின்று தோன்றினார் என்று தான் புனித நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு பிறந்தவர்களாயிருந்தும், இவருள் அறிவொளி வீசத் திகழ்ந்ததால் மிக உயர்ந்த பதவி பெற்றனர். இதனால் பிறப்பு ஒருவனை பிராமணன் ஆக்குவதில்லை என்று ஆகிவிட்டதல்லவா! அறிவால் ஒருவன் பிராமணன் ஆகிறான் என்றால் அதுவும் இல்லை. மற்ற மூன்று வர்ணத்தாருள்ளும் சாத்திரியர், வைசியர், சூத்திரர் பரம்பொருளைக் கண்டவரும், உன்னத உண்மையை அறிந்தவரும், அறிவொளி பெற்று திகழ்ந்தவரும் பலர் உளர். அதனால் அறிவு ஒருவனை பிராமணனாக ஆக்குவதில்லை என்றாகி விட்டதல்லவா? தொழில் தான் ஒருவனை பிராமணனாக்குகிறது என்றால் அதுவும் இல்லை. கடந்த பிறவியில் செய்திருந்த பணிகளும், இப்பிறவியில் செய்யத் தொடங்கிய பணியும், இனி வரும் பிறப்பில் செய்ய இருக்கின்ற பணிகளும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாகவே உள்ளது. நன் மக்கள், முற்பிறவிக் ஹகர்மா'வால் உந்தப்பட்ட நற்செயல்கள் புரிகின்றனர். ஆதலால், செயல் ஒருவனை பிராமணனாக்குவதில்லை. சமயக் கடன்கள் புரிவதால் ஒருவன் பிராமணன் ஆகிறான் என்றால் அதுவும் இல்லை. சமயக் கடனில் ஒன்றான பொன்னை வாரிக் கொடுத்தல், செய்திருக்கும் சாத்திரியர், வைசியர், சூத்திரர் பலர் உண்டு. அதனால் சமயச் சடங்குகள் செய்வோன் பிராமணன் ஆகமாட்டான். இவ்வண்ணம் பல வகையிலிலும் பிராமணன் இல்லை என்றால், உண்மையில் யார் தான் பிராமணன்? ஆத்மாவைத் தெளிவாக அறிந்தவன் பிராமணன். பிறப்பு, இயல்பு, செயல் எனும் வேற்றுமைகளற்றவன் பிராமணன். ஆறு பலவீனங்கள், அறு நிலை என்பன போன்ற குறைகளில்லாதவன் பிராமணன். உண்மை, அறிவொளி, மகிழ்ச்சி, அழிவின்மை இவற்றின் வடிவமாயிருந்து தீர்மானங்கள் ஏதுமற்று எண்ணில்லாத் தீர்மானங்களுக்கு அடிப்படையாய் அமைய, எவன், எல்லா உயிருள்ளும், உறைந்திருக்கும் விழுப் பொருளாய்ச் செயல்படுகின்றானோ அவன் பிராமணன். மகிழ்ச்சியியல்பு, பகுக்க வொண்ணாத்தன்மை, அளப்பரிய நிலை, தன் சொந்த அனுபவத்தால் மட்டுமே உணர முடிவது போன்ற தன்மையுடையவனாய் எவன் வான்வெளி போல் அனைத்தின் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கிறானோ... எவன் தன்னை நேராய் தன் ஆத்மாவாய் வெளிப்படுத்துபவனோ, எவன் தன் இயல்பின் நிறைவேற்றத்தின் மூலம் ஆசை, பாவம் இவை போன்றவற்றின் குற்றங் குறைகளை நீக்கக் கண்டவனோ, எவன் அமைதியே உருவானவனாய், ஆசை முதலான ஐந்து கொடுநிலைகளைக் களைந்தவனோ, எவன் வீண் பகட்டு, நான், எனது என்பதற்ற மனத்தினாய் வாழ்பவனோ, அவனே பிராமணனாவான். இக்குணங்கள் கொண்டிருப்பவர் மட்டுமே பிராமணன். அந்தணன், அறவோன் ஆவான். இதுவே, வேத முடிவாகும்.

No comments: