Saturday, February 2, 2008

உலகப் பொதுமறையில் பக்தியுணர்வு

'தமிழுக்கும் அமுதென்று பேர்"…… இத்தொடரில், தமிழ், அமிழ்து இரண்டும் பெற்றுள்ள இடம் தெய்வீகத் தன்மை கொண்டது. பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பதை அனைத்து உயிர்களுமே உணர்கின்றன. பிறந்த உயிர்கள், உண்டு உயிர்த்து வாழ்ந்து மறைவதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுதல் கூடாது. இறைவன், தன் சாயலாக, தன் படைப்பின் மேலான உயர்ந்த படைப்பாக மனிதனைப் படைத்தான். படைத்தவனானதன்னை உணரவேண்டும் என்பதே இறைவன் மனிதனைப் படைத்ததன் நோக்- கம். பிரபஞ்ச தோற்றங்களுக்குப் பின்னால் நித்தியமானதாக, அனைத்துயிர்களின் ஆன்மாவாக ஒரு மெய்- பொருள் உள்ளது. வெவ் வேறு வில்களுக்கு ஒரேகை போலதான் அம்மெய்பொருள். அதனை உணர்பவனே பக்திமான்.
தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும் முதல்படி பக்தி. பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மனிதன் அடைந்துள்ள பெருமைகளுள் சிறப்பானது வணங்கும் தன்மை. தன்னை விட அனைத்திலும் மிக்கவரை வணங்கும் தன்மையுடைய மனிதன், தான் தோன்றியிருக்கும் உலகம், அதன் இயக்கம், அதில் நடைபெறும் சிறப்புக்கள் எல்லாவற்றிற்கும் தலைமையாக ஒரு பொருள் இருந்தல் வேண்டும் எனக்கருதி அதனைப் பேரன்புடன் வழிபடலானான். இப்படி, மனிதன் ஆற்றும் பணிகள் எல்லாம் அன்பினை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனலாம்.
'அன்பு" என்பதும் மூன்றெழுத்து, அதன் உச்சக்கட்டமான 'பக்தி" என்பதும் மூன்றெழுத்து. 'அன்பு" எனும் சொல் பல பொருள்களில் குறிப்பிடப்படுகிறது. தனக்குச் சமமாக உள்ளோரிடம் காட்டும் அன்பு, 'நட்பு" என்று கூறப்படுகிறது. ( நட்பு மார்க்கத்தில் தன் பக்தியை வெளிப்படுத்திய சுந்தரர் கதையைச் சான்றாகக் கொள்ளலாம். தமக்குக் கீழோரிடம் காட்டம் அன்பு 'இரக்கம்" அல்லது 'அருளுடமை" எனப்ப-டுகிறது. பெரியோர்களிடம் காட்டும் அன்பு 'பக்தி" ஆகிறது.
பெற்றோர் தம் மக்களிடம் காட்டும் அன்பு, 'பாசம்" எனப்படுகிறது. இல்வாழ்க்கையில் இதுவே 'காதல்" எனப்படுகிறது. தாய்மொழி, தாய்நாடு இவற்றின் மீது காட்டப்படும் அன்பைப் 'பற்று" என்பர். அந்த அன்பின் முதிர்ந்த நிலை, இறைவன் நம்மீது காட்டும் அன்பு 'அருள்" எனப்படுகிறது. எல்லா உணர்ச்சிக-ளுக்கும் தாயாக விளங்குவது அன்பு. அன்பின் முதிர்நிலையே பக்தி எனலாம். பக்தியின் வேற்றுருவே அன்பு எனலாம்.
ஆன்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையேயுள்ள உறவைக் குறிப்பது பக்தி. உயிர்கள் ஒவ்வொன்றும் இறைத்தன்மை கொண்டவையே. ஓருயிர் இன்னொரு உயிரிடம் கொள்ளும் பக்திதான் அன்பு, பாசம், கருணை, அருள், பற்று, காதல் என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளது. நுட்பமும், திட்-பமும் வாய்ந்த அருமையான இவ்வுணர்வைத் தெய்வப்புலவர் தம் உலகப் பொதுமறையில் எங்ஙனம் வெளிப்படுத்தியுள்ளார்.
காலந்தோறும் தோன்றியுள்ள தமிழில் தமிழிலக்கியங்களுள், ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றுள்ள தெய்வப் பனுவல், தெய்வப் புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, பக்தியுணர்வை உலகினுக்கீந்த நிலையைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
கடவுள் வாழ்த்தில் பக்தி வெளிப்படுமாறு எழுத்தைக் கொண்டு எழுதியவனை எண்ணிப் பார்க்கிறோம். அதேபோல உலகத்தைக் கொண்டு அதைப்படைத்த இறைவனை எண்ணிப் பாhக்க வேண்டு- ம். அவனை நாம் வேறெங்கும் தேடவேண்டியதில்லை. நம் மனதில் நம் உடனே பிறந்த அவனிடம் அடை-க்கலம் புகுந்தோர் நலமாக வாழ்வர். விருப்பு வெறுப்பு இல்லாமல் அவரைச் சரண் புகுந்தால் நல்வினை தீவினைகளாகிய இரு வினைகளும் நம்மைச் சேரா. விருப்பு வெறுப்புகளை விலக்கி, அவற்றிற்கு காரண- மான ஐம்புலன்களின் ஆசைகளைக் குறைக்க வேண்டும். எத்துணைக்கெத்துணை நன்னெறிகளைப் பின்ப-ற்றுகிறோமோ அத்துணைக்கத்துணை நல்வாழ்வு கிட்டும். தன்னிகரில்லா இறைவனைச் சரணடைந்தோர், தம் மனக்கவலைகளை போக்கிக்கொள்ள முடியும். மனம் என்று ஒன்று இருக்கும் வரை அது சஞ்சலித்துக்கொண்டே இருக்கும். நல்லதோடு கெட்டதையும் நினைக்கத்தான் செய்யும். புண்ணியத்தோடு பாவத்தையும் செய்துகொண்டே இருக்கும். இந்த பாவத்திற்குரிய விளைவாகத்தான் நமக்கு இறைவன் துன் பங்களைத் தந்து கொண்டிருக்கிறான். தமக்கு வரும் துன்பங்களைப் போக்குவதற்காகவே பொதுவாக அனைவரும் பிராத்தனை என்னும் வழிபாடு செய்கின்றனர். இதைத்தான் பக்தி என்று நினைக்கிறோம். எல் லாம் வல்ல இறைவனை சரணடைந்தோர் உலகத் துன்பங்கள் என்னும் கவலைகளை நீந்திக் கடக்க இயலாது. 1. தன் வயத்தனாதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை உணர்வினனாதல் 4. முற்றும் உணர்தல் 5. பாசங்களால் பந்தப்படாமல் இருத்தல் 6. பேரருளுடைமை 7. எல்லையில்லா வல்லவனாதல் 8. சச்சிதானந்த மயமாக இருத்தல்.
இப்படிப்பட்ட தன்னிகரில்லா தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கையை தளர விடாமல், அவனையே கதி எனச் சரணடைவோரே பக்தர்கள் இவர்களால் எத்தகு துன்பத்தையும் சமாளிக்க முடியும். இது பொய்யா மொழிச் செய்தி, நாம் அன்றாட வாழ்வில் கடந்து செல்ல ஒவ்வொரு கணத்திலும் பெரிய பொருள் பொதிந்துள்ளது. இது ஆண்டவனுடையது என்ற உணர்ச்சியுடன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது புனிதமாகி விடுகிறது. இது பொதுமறையின் கடவுள் வாழ்த்து உணர்த்தும் பக்தி உணர்வன்றோ!

No comments: