Saturday, March 15, 2008

ஸ்டுக்கார்ட் சித்திவிநாயகர் ஆலயம்



30 ஜூலை 2002 அன்று ஸ்டுட்கார்ட் ஜெர்மனியில் சித்தி விநாயகர் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் ஏறக்குறைய ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த ஆலயம் இருக்கும் நகரம் ஸ்டுட்கார்ட் (தெற்கு ஜெர்மனியின் ஒரு நகரம்). இங்கு இந்த ஆலயம் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஆனால் இதற்கு முன்பதாக ஆலயம் வேறு இடத்தில் 3ம் மாடியில் ஒரு அறையில் வாடகைக்கு இருந்து வந்தது. விநாயகர் விக்ரகமும் மற்றும் படங்களும் அலமாரிக்குள் வைக்கப்பட்டு வாரம் ஒரு முறை இங்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆலயத்திற்குத் தனியாக நிலம் வாங்கி அதற்காக ஒரு முழு ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆலய நிர்வாகம் இயங்கிக் கொண்டிருந்தது.
தற்பொழுது இந்த ஆலயம் ஸ்டுட்கார்ட் நகரத்தில் வைப்லிங்கர் சாலையில் இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. மூல மூர்த்தியாக விநாயகரும், பரிகார தேவதைகளாக மகாலஷ்மியும் முருகனும் இருக்கின்றனர். கருவரை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரகார மூர்த்தி, உற்சவமூர்த்தி, பரிகார தெய்வங்கள் ஆகியவற்றின் சிலைகள் எல்லாம் தனி நபர்கள் முயற்சியில் கும்பகோணத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன் நவகிரங்களும் கூட உள்ளன.
இந்த 2ம் மாடியில் நீண்ட விஸ்தாரமான 2 அறைகளும் 2 சிறிய அறைகளும் இருக்கின்றன. இப்பொழுது ஆலயம் வாடகை கட்டிடத்தில் தான் அமைந்திருக்கின்றது. வெகு விரைவில் தக்க நிலத்தை வாங்கி அங்கு ஆலாயத்தை அமைக்க வேண்டும் என்று தற்போதைய ஆலய நிர்வாகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
கும்பாபிஷேகத்திற்காக விசேஷமாக இலங்கை இனியலிலிருந்து பிரதான குருக்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரது தலைமயில் இந்த விழா சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை (30.6.2002) நடைபெற்றது. ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் ஜெர்மானியர்களும் (சிலர்) இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பூஜையின் போது மிக விரிவாகத் தேவாரப் பாடல்கள் பற்பல பதிகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஓதப்பட்டது சிறப்பாக இருந்தது. உதாரணமாக தாழ் திறப்பதற்கான பதிகம் மங்களப் பதிகம் போன்றவற்றைச் சொல்லலாம். அத்தோடு பிரதான குருக்கள், தான் செய்கின்ற ஒவ்வொரு பூஜைக்குமான விளக்கத்தையும் ஆரம்பத்திலேயே கூறி தெளிவாக மக்கள் இப்பூஜைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் செய்வித்தார்.
ஆலய நிர்வாகம் தொடர்ந்து சைவ சமய விளக்க பாடங்களையும் யோகப் பயிற்களையும் ஒவ்வொரு வாரமும் நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக, முதலில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எனும் வகையில் சமய தத்துவ வகுப்புக்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

No comments:

zwani.com myspace graphic comments